நிதி அமைச்சருக்கேதேர்தலில் போட்டியிட பணம் இல்லையா? நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன?
இந்தியாவின் நிதி அமைச்சருக்கே
தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா?
உண்மையில் நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன?
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தனக்கு வசதியில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
2016 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிர்மலா
சீதாராமன், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவார்
என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்
பிரல்ஹத் ஜோஷி கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப்
போவதில்லை என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம்
இல்லை என்று கூறியுள்ள அவர், வேட்பாளரின் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில், வாக்களிக்கும் முறை இங்கு உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் விதிமுறைகளை பொறுத்தவரை, ஒருவர் பொதுத்தொகுதியில் மக்களவை உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட வைப்புத்தொகையாக ரூ. 25 ஆயிரம் கட்டினால் போதும் வேறு எந்த பணமும் தேவையில்லை.
அதே நேரம், வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பொறுட்டு, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்காக அந்தந்த வேட்பாளர்கள் தங்கள் தகுதிக்கு செலவு செய்து வருகின்றனர்.
அதுவும் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஒரு வேட்பாளர் அதிக பட்சமாக 95 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன என்ற கேள்வி வேகமக பரவி வருகிறது.
கடந்த 2022 மாநிலங்களவை உறுப்பினராக கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், அவரது மொத்த சொத்து மதிப்பு 2.5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,1.87 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துகளும், 63.39 லட்சம் ரூபாய் அளவுக்கு அசையும் சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 30.44 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2020-21-ல் அவரின் ஆண்டு வருவாய் 8.08 லட்சம் ரூபாய் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதை, சி.பி.ஐ கட்சியின் பொதுச் செயலாளார் டி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை என்றும்,
மக்களின் ஆதரவு இருந்தால் போதுமென கூறியுள்ள அவர், அப்படியென்றால், போட்டியிடும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்றவர்களிடம் நிறைய பணம் உள்ளதாக கூறுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எது எப்படியோ உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று கூறியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.