"ஈபிஎஸ் முயற்சி எடுபடாது" - அமைச்சர் ஆவேசம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சி, தமிழக மக்களிடம் எடுபடாது என அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம் தலையிடுவது மாநில நலனுக்கு எதிரானது என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சிபிஐ மட்டும் நேர்மையாக விசாரணை நடத்தும் எனக் கூறுவது சரியானதல்ல என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே கூறி இருக்கிறார் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஜனநாயகக் கடமையை வெளியில் இருந்து செய்து வருகிறார் என்றும், சிபிசிஐடி போலீசார் உண்மையான விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.