சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி... திமுகவில் இதுவரை இல்லாத புதிய அறிவிப்பு - அதிரப்போகும் டெல்லி
சோனியா காந்தி, மம்தா பானர்ஜி வரிசையில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த கூடுதல் விபரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திமுகவை பொறுத்தவரை இதுவரை மக்களவை, மாநிலங்களவை என தனித்தனியாக தலைவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டையும் சேர்த்து நாடாளுமன்ற குழு தலைவராக திமுக எம்பி கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியும் அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மம்தா பானர்ஜியும் தேர்வாகியுள்ள நிலையில், இந்த வரிசையில் இப்போது கனிமொழியும் இணைந்துள்ளார்.
இதன் மூலம் திமுகவின் டெல்லி முகமாக மாறி இருக்கிறார், கனிமொழி.
18 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவம் பெற்றவர்.
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியால் 2007 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த கனிமொழி.... 2019ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்பியாகவே தொடர்ந்தார்.
பிறகு 2019ம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் மக்களவைக்குள் எம்பியாக நுழைந்த அவர்,
இம்முறை மீண்டும் தூத்துக்குடியில் களமிறங்கி... தம்மை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து, பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருந்தார்.
தற்போது திமுகவில் துணை பொதுச்செயலாளர் என்ற முக்கியமான பதவியை வகித்து வரும் கனிமொழி... இனி திமுக நாடாளுமன்ற கட்சி தலைவர் என்ற அடிப்படையில் இனி மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களிலும், அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும், முன்னிலை வகிப்பார் என்று அறிவாலயம் வட்டாரத்தில் பேசப்படுகிறது...
இதை தவிர்த்து திமுகவின் மக்களவை குழுத் தலைவராக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு, மக்களவை குழு துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் எம்பியுமான தயாநிதி மாறன் மற்றும் மக்களவை கொறடாவாக திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாநிலங்களவை குழுத்தலைவராக திமுக கொள்கைபரப்புச் செயலாளரும், எம்பியுமான திருச்சி சிவா, மாநிலங்களவை குழு துணைத் தலைவராக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக திமுக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வில்சனும் பட்டுள்ளனர்.
இதை தவிர்த்து இரு அவைகளின் பொருளாளராக திமுக கொள்கைபரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்பட்டுள்ளார்.