டெல்லி விரைந்த அண்ணாமலை - இன்று என்ன நடக்க போகிறது?
டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க, முக்கிய தலைவர்கள் டெல்லியில் கூடியுள்ளனர்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், டெல்லியில் உள்ள பாஜக அலுவலத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது, மக்களவை குழு தலைவராக மோடியை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.