ஜூலை 15 பள்ளி மாணவர்களுக்கு.. - வெளியான முக்கிய தகவல்
அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆயிரத்து 545 பள்ளிகளைச் சேர்ந்த, 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு ஏற்பட்ட வரவேற்பை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும், 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.