"அவரைப் போல பழிவாங்கும் அரசியல் நமக்கு வேண்டாம்" - ஜெகன்மோகனை மறைமுகமாக சாடிய சந்திரபாபு நாயுடு
விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபாபுநாயுடு, மனம் திறந்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப் நீண்ட நாட்களாக விமர்சிக்காமல் இருந்த அவர், மறைமுகமாக அவரைப் பற்றி பேசினார்.
ஒரு மாநிலத்தை எப்படி ஆளக்கூடாது என்பதற்கு நேற்று வரை ஆந்திராவை ஆட்சி செய்தவர் உதாரணமாக இருக்கிறார் என்றும், அதனால்தான் இனி அவர் தேவையில்லை என மக்கள் நம்மை பதவியில் அமர வைத்துள்ளனர் என்றும் கூறினார்.
அவரைப் போலவே நாமும் பழிவாங்கும் அரசியலை முன்னெடுத்தால், அது நமக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம், மன்னித்து விட்டுவிட்டால் அது நமக்கும் நாட்டுக்கும் பெரும் தலைவலி ஆகி விடும் என்றும் அவர் கூறினார்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அது சட்டபூர்வ தண்டனையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்படி ஒரு அரசியலைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பேச, கூட்டத்தில் கரவொலி எழுந்தது.