CAA-க்கு எதிரான வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் ஒப்புதல்..!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில், அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு மார்ச் 11ஆம் தேதி அறிவித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தத் தடை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அசாம் காங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முறையிட்டார். இதை ஏற்ற தலைமை நீதிபதி இந்த மனுக்கள் மார்ச் 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.