சக்சஸ் ஆன "ப்ராஜெக்ட் சுரேஷ் கோபி" ஆனால் கேரள மண்ணில் வரலாற்றை மாற்றிய கோபியை ஏமாற்றியதா பாஜக?

x

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கேரள நடிகர் சுரேஷ் கோபி, பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அவர் விளக்கமும் அளித்திருக்கிறார். என்னதான் நடந்தது இதன் பின்னணியில்? பார்க்கலாம் விரிவாக..

"திருச்சூரில் ஒரு மத்திய அமைச்சர்-மோடி உத்தரவாதம்" என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டது பாஜக...

"ப்ராஜெக்ட் சுரேஷ் கோபி"யை திருச்சூரில் செயல்படுத்தி வெற்றியும் கண்டது...

கேரள தேசத்தில் பாஜக தடம் பதிக்க முழு முதல் காரணமாக இருந்தவர் சுரேஷ் கோபி. கடந்த சில தேர்தல்கள் அவருக்கு தோல்வியை தந்தாலும், என்ன செய்தால் வெற்றி கிடைக்கும் என பார்த்து பார்த்து திட்டமிட்டு மக்களிடையே சென்றார் அவர்..

திருச்சூர் தொகுதியில் என்னவெல்லாம் தேவை என கண்டறிந்து அதை நிறைவேற்றி தருவேன் என மக்களிடம் உறுதி கொடுக்க அது அவருக்கு வெற்றியை தேடித்தந்தது... இதுவரை பாஜகவுக்கு இடமில்லை என சொல்லிவந்த கேரள மக்கள் சுரேஷ் கோபியை வெற்றி பெற வைத்து பாஜகவுக்கு முதல் வாய்ப்பை அளித்தனர்..

கேரள மண்ணில் பாஜக வெற்றியை கொண்டாட தீர்மானித்த கட்சி தலைமை அவருக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என தீர்மானித்தது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடந்த பதவி பிரமாண நிகழ்வில் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்...

அவரை தொடர்ந்து கேரள பாஜக தலைவரான ஜார்ஜ் குரியனும் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார்...

கேரளாவில் இருந்து முதல் பாஜக எம்.பி சுரேஷ் கோபி... அவருக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர்... ஆனால் அவருக்கு வழங்கப்பட்டதோ இணை அமைச்சர் பதவி... இது சுரேஷ் கோபியின் ஆதரவாளர்களை அதிருப்தி அடையச் செய்தது...

இந்த சூழலில் தான் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவின... ஆனால் மத்திய அமைச்சரவையில் இருந்து சுரேஷ் கோபி விலக விரும்புவதாக பரபரப்பு செய்தி வெளியானது...

நாடாளுமன்ற உறுப்பினராகவே தான் பணியாற்ற விரும்புவதாகவும், அமைச்சர் பொறுப்பு தேவையில்லை என்பதே தன்னுடைய நிலைப்பாடு எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது....

அமைச்சர் பொறுப்பில் தனக்கு நாட்டமில்லை என்ற முடிவை கட்சி தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவேன் என நம்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்ததாய் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின.

பத்மநாப சாமி கோவிலின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் உள்பட 4 படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார் சுரேஷ் கோபி ...

ஒப்பந்தம் ஆகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் கோபி கட்சியின் முடிவுக்காகக் காத்திருக்கிறார் என்ற தகவல் பரவியது...

இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என்று சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளார்...

கேரள வளர்ச்சிக்கான திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவித்த அவர், இணை அமைச்சர் பதவி தான் வழங்கப்படுகிறது என்று தெரிந்து தான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்...

மேலும் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது என்றும், பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் கேரளாவின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் எனவும் உறுதியளித்துள்ளார்...

எதுவாயினும் சுரேஷ் கோபி பதவியில் நீடித்து கேரளாவுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்