"பயங்கரவாதம் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது"- காஷ்மீரில் மேடையில் கர்ஜித்த மோடி | Modi
பாஜக அரசால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, டோடோ பகுதியில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்பு ஒரு காலத்தில் காஷ்மீர் இளைஞர்கள் கல்விக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்போது மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஐஐடி போன்றவற்றால் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைந்தால், லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர மற்ற கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, இதன் மூலம் இட ஒதுக்கீடு பறிக்கப்படும் என்று எச்சரித்தார். காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாதம் இல்லாத, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்து விளங்கும் காஷ்மீரை பாஜக உருவாக்கப் போவதாக குறிப்பிட்டார்.