"கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து.." - தேர்தல் ஆணையத்திற்கு வந்த பரபரப்பு கடிதம்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில், கெஜ்ரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், சில மெட்ரோ ரயில் நிலையங்களில், மிரட்டல் செய்தி எழுதப்பட்ட படங்கள், வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் உள்ள சதியை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசால் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது என்றும், அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால், அதற்கு பிரதமர் மோடி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்தவரை உடனடியாக கைது செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.