ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தீட்டிய திட்டம்.. விசாரணையில் வெளியான தகவல்

x

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது வழக்கறிஞர் அருள் என்றும், அதனை செயல்படுத்தியது பொன்னை பாலு என்றும் போலீசாரின் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள், பூந்தமல்லி, திருவள்ளூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக இருந்துள்ளார். இவர், ஆம்ஸ்ட்ராங்கின் தினசரி நடவடிக்கைகளை, வழக்கறிஞர்கள், நண்பர்கள் உதவியுடன் கண்காணித்தாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்தவர்களிடம் தகவல்களை பெற்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அருள்தான் கொலைக்கான திட்டம் தீட்டிக் கொடுத்ததும், ஆயுதங்களை வாங்கிக் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும், திட்டத்தை செயல்படுத்திய பொன்னை பாலு, கொலைக்கு பின், ஆயுதங்களை அருளிடம் ஒப்படைத்ததாகவும் தெரிகிறது. கொலைக்கு பயன்படுத்திய அந்த ஆயுதங்களை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த நரேன், சதீஷ், சீனிவாசன் ஆகியோரின் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதும், போலீஸ் கஸ்டடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கறிஞர் அருள், மற்றொரு வழக்கறிஞரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலையை அரங்கேற்றியதும், திருநின்றவூர் பகுதியில் உள்ள அருளுக்கு சொந்தமான வீட்டில் கொலைக்கான திட்டம் வகுக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, அருளை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 11 பேரின் செல்போன்கள் எண்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்