"மாலையை அவங்களுக்கு போடுங்க"..அண்ணாமலை பாதயாத்திரையில் ருசிகரம்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. மங்களாபுரம் அரிமளம் விளக்குப் பகுதியில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, அம்புலி ஆற்றுப் பாலம், சந்தைப்பேட்டை, வடகாடு முக்கம், அரசமரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடந்து சென்று காமராஜர் சிலை அருகே வாகனத்தில் ஏறி உரையாற்றினார். பின்னர், அம்புலி ஆற்றுப் பாலத்தின் அருகே பாஜவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அண்ணாமலைக்கு அரபு எழுத்துகளால் அமைந்த புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவுப் பரிசாக வழங்கினார். பாஜக தொண்டர் ஒருவர் தக்காளி மாலை அணிவிக்க முயன்ற போது அண்ணாமலை அந்த மாலையை மகளிர் அணிக்கு வழங்குமாறு கூறினார். இதனிடையே, ஆலங்குடியில், உறவினர்கள் இன்றி வசதி இன்றி உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் கணேசனை, நேரில் சென்று அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். இரும்புகடை வைத்திருக்கும் கணேசன், 55 ஆண்டுகளாக 10 ஆயிரத்து 23 உடல்களை அடக்கம் செய்துள்ளார்.