தமிழ்நாடு முழுக்க வெடியை போட சொன்ன அண்ணாமலை
பட்டாசு தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்காக, பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக்கு 6ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசு வியாபாரம் நடந்த நிலையில், பல ஆண்டுகளாக குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற கருத்து இருந்தாலும், அது சில இடங்களில் அளவுக்கு மீறி திணிக்கப்படும் கருத்தாக உள்ளதாக கூறியுள்ளார். அதிகமாக கார்பன் டை-ஆக்சைடு வெளியேற்றப்படும் நாடுகளில் அமெரிக்கா 16வது இடமும், சீனா 25ஆவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, 125ஆவது இடத்தில் இந்தியா இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை பட்டாசு வெடிப்பதை ஒரு பிரச்சினையாக பேசப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். பட்டாசு தொழிலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள 8 லட்சம் பேருக்காகவும், கடனை அடைத்துவிடலாம் என்று கடைபோட்டுள்ள சிறு வணிகர்களின் எண்ணம் நிறைவேற பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.