பா.ரஞ்சித் கதறியது ஏன்? தமிழகம் அறிந்திராத ஆம்ஸ்ட்ராங் கதை - சில வினாடியில் சரிந்த சாம்ராஜ்யம்

x

இந்தியாவையே ஆட்டிப்படைத்துள்ளது தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்... சென்னை பெரம்பூரில் பிறந்து உத்தரப் பிரதேசம் மாயாவதி வரை ஆம்ஸ்ட்ராங்குக்கு அறிமுகம் கிடைத்தது எப்படி?...

ஆம்ஸ்ட்ராங் கொலையால் பதறிப் போயிருக்கிறது தமிழகம்... சாலை மறியல்கள் போராட்டங்கள்...என சென்னை பரபரக்க...பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது மாயாவதியின் சென்னை வருகை குறித்த அறிவிப்பு...

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?...

பிறந்தது சென்னை பெரம்பூரில்...வேணுகோபால சுவாமி கோவில் தெருவில் வசித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை கிருஷ்ணன் ஒரு கூலித் தொழிலாளி... உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள்...1 சகோதரி...

பள்ளிப் படிப்புடன் சேர்த்து அரசியலையும் பயின்றுள்ளார் ஆம்ஸ்ட்ராங்... பதின்பருவத்திலேயே அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமளவு அரசியல் ஆர்வம் வேரூன்றியது...

அம்பேத்கர் கொள்கைகள் மீது தீராக்காதல் கொண்ட ஆம்ஸ்ட்ராங், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் சட்டம் பயின்று வழக்கறிஞரானாராம்...

சிறுவயது முதலே ஆம்ஸ்ட்ராங்குக்கு குத்துச் சண்டை மீது தீராக்காதல்... அரசியல் போல குத்துச் சண்டையையும் பயின்று வந்துள்ளார் தினம் தினம்... ஆனால் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதே கொலையாளிகள் கூடுதல் பலத்தோடு வரக் காரணமாய் மாறிப்போனது..

சாதி ரீதியான காரணங்களால் மத்திய அரசின் சம்பளம் கிடைக்காமல் போனதால் தலித் அரசியல் பக்கம் ஆர்வம் திரும்பியதாம் இவருக்கு...

புரட்சி பாரதம் கட்சி பூவை மூர்த்தி... பகுஜன் சமாஜ் கட்சியின் கன்சிராமும் தான் அரசியல் முன்னோடிகள் ஆம்ஸ்ட்ராங்குக்கு...

குடும்பம்...உடனிருந்தவர்கள் அனைவரும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதும்...ஆம்ஸ்ட்ராங்குக்கு அம்பேத்கர் தான் உயிர்... அவரது புத்தகங்களைப் படித்து பட்டியலினத்தவரின் உரிமைகளுக்காகப் போராட முனைப்பு கொண்டார்...

2000ம் ஆண்டு முதலே மிகத்தீவிரமாக அரசியலில் ஈடுபடத் துவங்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங்...

கட்சி ரீதியில் பார்த்தால் புரட்சி பாரதத்தில் துவங்கியுள்ளது அவரது அரசியல் பயணம்...

புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்...

2002ல் பூவை மூர்த்தி மறைந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கும் புரட்சி பாரதத்தில் இருந்து விலகினார்...

அம்பேத்கர் மீது அதீத மரியாதை கொண்ட ஆம்ஸ்ட்ராங், டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கினார்...பின்னர் தன் பகுதியில் சமூகம் சார்ந்த பல முன்னெடுப்புகளை எடுத்ததால் இளைஞர்களின் செல்வாக்கைப் பெற்றார்...

மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்த நிலையில், அவர் வசித்த பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இடும்பன் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது...

இதையடுத்து 99வது வார்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங்... அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்...

ஆனால் அதில் திருப்பமாக அவரது வெற்றி செல்லாது என வழக்கு தொடரப்பட்டது... இருப்பினும் தொடர் சட்டப்போராட்டத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது...தேர்தல் வெற்றி ஆம்ஸ்ட்ராங்குக்கு உற்சாகம் தரவே பகுஜன் சமாஜ் கொள்கைகளால் மிகத் தீவிரமாக ஈர்க்கப்பட்ட அவர், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மானேவை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்...

தொடர்ந்து 2006ல் மாயாவதியை முதன்முதலாக ஆம்ஸ்ட்ராங் சந்தித்த போதே அவரது அரசியல் ஆர்வத்தைக் கண்டு வியந்து போன மாயாவதி...2008ல் அவரை அக்கட்சியின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்தார்...அதே ஆண்டு அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதியை நேரே சென்னை அமைந்தக்கரைக்கு வரவழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தி அசத்தியுள்ளார்...

வார்டு உறுப்பினராக இருந்த போதே... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி... முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆம்ஸ்ட்ராங்குக்கு...

2006ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட அதே கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார்... அப்போது மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்கள் பகுதியின் மண்ணின் மைந்தர் ஒருவரை எதிர்த்து போட்டியிடுகிறேன்" என ஆம்ஸ்ட்ராங் குறித்து பெருமையுடன் பேசியுள்ளார்...

திருமாவளவன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட தலித் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது இவருக்கு...

இயக்குநர் பா.ரஞ்சித் போன்ற பல கலைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்... பா.ரஞ்சித் கலையுலக ஆசையை நிறைவேற்றுவதிலும் அவரது மேற்படிப்பு முடிப்பதற்கும் பேருதவி புரிந்துள்ளார்...

அதனால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை ரஞ்சித்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறியழுதுள்ளார்...

ஆம்ஸ்ட்ராங்கிற்கு 2015ல் தான் திருமணம் முடிந்தது... அழகிய பெண் குழந்தை உள்ளது.. மனைவி பகுஜன் சமாஜ் கட்சித் துண்டை அணிந்திருக்க... தன் குழந்தையை மாயாவதி தூக்கிக் கொஞ்சிய போது ஆம்ஸ்ட்ராங் பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம் இப்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது...தேசிய கட்சியான பகுஜன் சமாஜை சென்னையில் அனைவரும் அறிய முழு முதற்காரணம் ஆம்ஸ்ட்ராங் தான்... தனி ஆளாக சென்னையில் அக்கட்சியை வளர்த்தவர்...உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை மாயாவதி சென்னை வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராகவே இருந்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் மரணம் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வட சென்னை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்