அமித்ஷா கண்ணிலே விரல் விட்டு ஆட்டிய கெஜ்ரிவாலின் அரசியல் வாரிசான அதிஷி யார்? - பரபரப்பு பின்னணி
டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதிஷி யார் என்பதை இப்போது பார்க்கலாம்.1981-ல் டெல்லியில் பிறந்தவர், அங்கேயே பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பை முடித்தவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பை முடித்தவர். பின்னர் ஆந்திராவுக்கு வந்து பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். இயற்கை விவசாயம் மற்றும் முற்போக்கான கல்வி முறைகளில் ஈடுபட்டார். மத்திய பிரதேசத்திலும் பணியாற்றியவர் பிரசாந்த் பூஷன் வாயிலாக ஆம் ஆத்மி கட்சிக்கு வந்தார். அரசியலில் மாற்றம் என்ற முழக்கத்தோடு வீதியில் இறங்கிய கெஜ்ரிவாலோடு, ஆரம்ப காலக்கட்டங்களில் கைக்கோர்த்தவர். கட்சியின் கொள்கை வகுப்பில் இடம்பெற்றவர். ஆம் ஆத்மி அரசுக்கு பெயர் பெற்றுக் கொடுத்த டெல்லி கல்வி மாடலில், மணிஷ் சிசோடியா குழுவில் பணியாற்றியவர். 2019 ஆம் ஆண்டு கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். 2020 சட்டப்பேரவை தேர்தலில் கால்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து சட்டப்பேரவைக்கு சென்றார். கெஜ்ரிவால், சிசோடியா சிறை செல்ல நேரிட்ட போது பாஜகவை சமாளித்து, ஆட்சியையும், கட்சியையும் கவனித்தவர். அரியானா பாஜக அரசாங்கம் டெல்லிக்கு தண்ணீர் திறக்கவில்லை என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். ஆட்சியில் முக்கியமான கல்வித்துறை, நிதித்துறை, வருவாய்துறை என பல துறைகளை கவனித்தவர். சவால்கள்... போராட்டங்கள் பல கண்ட அதிஷி டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.