அதிமுக ஆணிவேரில் கை வைத்த திமுக-பாஜகவின் ஒரே நம்பிக்கையில் பேரிடி.. 2021-ல் மிஸ் ஆனது 2026 கைகூடுமா
கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது, திமுகவின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களுள் ஒன்று எனக் கூறுகின்றனர், அரசியல் விமர்சகர்கள். இதற்கு காரணம் என்ன ? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் உள்ளடக்கிய கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவின் கோட்டையாக அறியப்பட்டது.
பலமுறை திமுக கோட்டைவிட காரணமாகிய இந்த கொங்கு மண்டலம்... இப்போது திமுகவின் கோட்டையாக மாறி வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது.
கடந்த முறை போல் இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
தேர்தலுக்கு முன்பாகவே சேலத்தில் இளைஞர் அணி மாநாட்டை நடத்தி
கொங்கு மண்டலத்தை திமுகவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அதுவும் பாஜகவாலும், அதிமுகவாலும் பெரிதும் குறிவைக்கப்பட்ட கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியிருக்கிறது.
தேர்தல் வியூகங்களை வகுத்திருந்த திமுக மேற்கு மண்டலம் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பணியமர்த்தியது.... கோவை மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா களமிறங்கியது இதற்கு முக்கிய காரணமும் கூட...
ஆனால் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்
அதிமுக வென்று இருந்த 75 தொகுதிகளில் 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் இருந்து கிடைத்த வெற்றி.
கொங்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள 68 தொகுதிகளில் திமுக கூட்டணி 24 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
அதன் பிறகு நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது, திமுக
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிகனியை தன்வசமாக்கிய திமுக, அடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கிய வியூகங்களை தற்போதே வகுக்க தொடங்கிவிட்டது.
"2026 சட்டமன்றத் தேர்தலில்
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15ம் தேதி கோவையில் நடக்கும் முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்" என்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை இதனை உறுதி செய்திருக்கிறது.
ஏற்கனவே கோவையில் செம்மொழி பூங்காவை கட்டி வரும் திமுக அடுத்து சர்வதேச அளவில் கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இப்படி கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் திமுக, 2021ல் விட்டதை 2026 சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்ற தற்போதே தேர்தல் வியூகங்களுடன் களமிறங்கிவிட்டதாக கூறுகின்றனர், அரசியல் விமர்சகர்கள்.