வெளியே வந்த MRV... சிறைத்துறை தலைமை காவலர் சஸ்பெண்ட்... சிக்கலில் 3 காவலர்கள்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமினில் விடுதலையான போது, அவரை வரவேற்க வந்த அதிமுக நிர்வாகிகளை சிறை வாசல் வரை அனுமதித்த புகாரில், சிறைத்துறை தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 31 ஆம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் பலர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கூடி இருக்கின்றனர். சிறை விதியின் படி அந்த இடத்தில் யாரும் நிற்க அனுமதியில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோர் சிறையின் முக்கிய வாசலை அடைத்துக் கொண்டு, ஜாமினில் வெளியே வந்த விஜயபாஸ்கரை கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரிக்க சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். விசாரணையில், சம்பவத்தன்று சிறைத்துறை தலைமை காவலர் கணேஷ்குமார் பணியில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட அதிகாரிகள், மேலும் பணியில் இருந்த போலீசார் மூவரிடம் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பி இருக்கின்றனர்.