இடதுசாரி டூ வலதுசாரி - ஸ்ருதி மாறுகிறதா?... ராஜா கருத்து - ஆனந்த பைரவியா? தப்புத்தாளமா?

இளையராஜா... தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இசைஞானி...
x
இடதுசாரி டூ வலதுசாரி - ஸ்ருதி மாறுகிறதா?... ராஜா கருத்து - ஆனந்த பைரவியா? தப்புத்தாளமா?

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் விமர்சனங்களை எதிர்க்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின், பயணத்தில் அரசியல் பாதை குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...

இளையராஜா... தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இசைஞானி...

இன்று பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அவர், தனது இசை பயணத்தை தொடங்கியதே, இடது சாரிகளின் மேடைகளில்தான்...

தொடக்க காலங்களில் இளையராஜா ஊர் ஊராக சென்று, தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜனின் இசைக்குழுவில் பொதுவுடமை சிந்தனையை பரப்பும் பாடல்களை இசைத்தவர்.

செவி வழியாக மனதுக்குள் ஆக்சிஜனாக இறங்கும் இளையராஜாவின் இசை, இன்றும் பலருக்கு சுவாசமாகிப் போனது என்றால் மிகையல்ல... மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே சொந்தமென்றிருந்த இசையை சேரிகள் வரை கொண்டு சேர்த்தவர் இளையராஜா....

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளரான பின்னரும், சமூக சிந்தனைக்கொண்ட பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இன்றும் இடதுசாரிகள் கூட்டத்தில் ஒலிக்கும், மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜாவே...

1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் தொழிலாளர்கள் அடித்துக்கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் இடம்பெற்றிருந்தது.

தவிர இளையராஜா ஒரு ஆன்மிகவாதியும் கூட.... பல பக்தி பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இளைராஜா, ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ பாடலை உள்ளம் உருக பாடியிருப்பார்...

திருவாசகத்தின் பாடல்களைப்பாடி, சிம்பொனி வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா... எளிய மக்களின் குரலை இசையினால் பிரபலப்படுத்தியவர், இசையில் திரைவிளையாடல்கள் பல புரிந்தவர், பெரியார் படத்திற்காக இசையமைக்க மறுத்துவிட்டார் என பெரும் சர்ச்சை வெடித்தது. அந்த குற்றச்சாட்டை மறுத்தார் இளையராஜா...

இப்போது பிரதமர் மோடியின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என இளையராஜா பாராட்டியது அரசியல் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது.

அவரது கருத்துக்களை இடதுசாரி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மறுபுறம் இளையராஜாவின் சொந்த கருத்து, இதற்காக அவரை விமர்சிப்பது சரியல்ல என பாஜக களமிறங்கியிருக்கிறது. தமிழக ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள் எனக் குற்றம் சாட்டியிருக்கும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, இது நியாயமாகாது எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே தனது கருத்தை ஒருபோதும் திரும்பப்பெற மாட்டேன் என இளையராஜா கூறிவிட்டதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவோ, தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன் என பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

பொதுவுடைமை மேடைகள் மூலம் தனது இசை உலக பயணத்தை தொடங்கிய இளையராஜா மோடியை புகழ்ந்து பேசுவதை தப்புத்தாளங்கள் என்று கம்யூனிஸ்ட்கள் விமர்சிக்க....தன் மனதிற்கு பட்டதை நெஞ்சுரத்தோடு கூறிய ராஜாவின் பேச்சு ஆனந்த பைரவி என்று கொண்டாடுகிறார்கள் பாஜகவினர்...

Next Story

மேலும் செய்திகள்