அரசியலாகும் இசை சக்கரவர்த்திகளின் கருத்து!
இந்தி திணிப்பை என்றும் வலுவாக எதிர்த்து வரும் மாநிலமாக இருக்கிறது தமிழகம்..
இந்தி திணிப்பை என்றும் வலுவாக எதிர்த்து வரும் மாநிலமாக இருக்கிறது தமிழகம்.. இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இந்தியை ஆங்கில மொழிக்கு மாற்றாக கருதவேண்டும் என்றும் கூறியிருந்தார். அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என விமர்சித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அமித்ஷா கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்தான் இணைப்புமொழி எனக்கூறிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தமிழின் சிறப்பு எழுத்தான "ழ"கரம் ஏந்திய பெண் தாண்டவமாட, தமிழணங்கு எனக்குறிப்பிட்டு பதிலடி கொடுத்தது தனிக்கவனம் பெற்றது. இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. புகைப்படத்தை திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்பட பல தலைவர்களும், பிரபலங்களும், பொதுமக்களும் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை வரவேற்றனர். சமூக வலைதளங்களில் பலரும் அவரது பதிவை கொண்டாடும் நிலையில், ஒருசாரார் அரசியல் கருத்துக்களுடன் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டிருப்பதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற புத்தகத்தின் முன்னுரையில், முத்தலாக் தடைபோன்ற பிரதமர் மோடியின் நடவடிக்கையை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என புகழ்ந்திருக்கிறார் இளையராஜா. இதனை மோடி கையவச்சா அது ராங்கா போனதில்லை... என பாஜக ஆதரவாளார்கள் கொண்டாடும் நிலையில், மறுசாரரோ அவரது கருத்தை விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு இசை சக்கரவர்த்திகளின் கருத்துக்கள் அரசியல் அலையாக சமூக வலைதளங்களில் அடித்துக் கொண்டிருக்கிறது.
Next Story