வேலை வாய்ப்பு என்னாச்சு? - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் கேள்வி
கடந்த தேர்தலில் 2 கோடி வேலை வழங்குவதாக உறுதியளித்தீர்கள், செய்தீர்களா? என, பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, இந்திய எல்லை பகுதியில், தங்கள் ரத்தம், வியர்வையை இளைஞர்கள் சிந்தி இருப்பதாக கூறினார். நமது துணிச்சலான வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 1200 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்தது என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். சீனா ஊடுருவியபோது, 'இந்தியாவுக்குள் யாரும் வரவில்லை' என்று பிரதமர் கூறியது ஏன்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். பீகார் மக்களிடம் பொய் சொல்லாதீர்கள், அவர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்கினீர்கள், என்று சொல்லுங்கள் என்றும் ராகுல்காந்தி கூறினார். கடந்த தேர்தலில் 2 கோடி வேலை வழங்குவதாக உறுதியளித்தீர்கள் - நீங்கள் செய்தீர்களா? - இல்லை என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்காக, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்தது என்று கூறிய ராகுல்காந்தி, இன்று மக்கள் பணம் அனைத்தும் முதலாளிகளின் கைகளில் இருக்கும் என்றும் தெரிவித்தார். விமான நிலையம், ரயில் பாதை, சுரங்கம், வயல்கள் போன்றவை அந்த முதலாளிகளுக்கு தரப்படுகிறது என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் 22 நாட்களில் வெல்லப்படும் என்று கூறினார்கள், ஆனால், பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் பீகாருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ராகுல்காந்தி பேசினார். இந்த முறை பீகார் தேர்தல், நரேந்திர மோடி மற்றும் நிதீஷ் குமார் ஆகியோருக்கு சரியான பதிலைக் கொடுக்கும் என்று தான் நம்புவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story