சிறப்பான மருத்துவ கட்டமைப்பு அவசியம் - பிரதமர்

இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பாக உரிய முறையில் சிந்தித்து நடவடிக்கை எடுக்க மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
சிறப்பான மருத்துவ கட்டமைப்பு அவசியம் - பிரதமர்
x
பிரதமர் மோடி, 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  சில குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமில்லாதது என்றும்,  மக்களின் பொறுமை, நிர்வாகத்தின் தயார் நிலை மற்றும் முன்கள பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றால் கொரோனா கட்டுக்குள்  உள்ளதாகவும் உரிய நேரத்தில் பாதித்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றால் குணமடைந்தோரின் விகிதம் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.  கொரோனா சவாலை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள், சிறப்பான மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள் உற்பத்தி, முக கவச பயன்பாடு  மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் போன்றவை அதிக படுத்தப்பட்டு இருப்பது குறித்தும்  மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பரிசோதனை கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் எனவும், எந்தெந்த மாநிலங்களில் ஆரோக்கிய சேது செயலி மிக அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளதோ, அங்கு நல்ல முடிவுகள் கிடைத்து உள்ளதாகவும் இந்த செயலி அனைவரையும் சென்றடைய  நடவடிக்கை எடுக்கவும், பருவமழை காலத்தில் வரும் உடல் நலன் சார்ந்த நோய்கள் தொடர்பாக, மாநில அரசுகள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்றுக்கு எதிராக அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயமாக வெற்றியை அளிக்கும் எனவும் இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், உள் கட்டமைப்ப மற்றும் கட்டுமான தொழில்களை விரைவுப்படுத்த முதலமைச்சர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்