அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில், அவரது வருகையால் ஏற்படும் அரசியல் பொருளாதார தாக்கங்கள் என்னவாக இருக்கும் என அலசுகிறது இந்த தொகுப்பு.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை  : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?
x
* கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் சுமூகமாக இல்லை என்பதுடன், அடிக்கடி சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

* அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்க நலன்களை முன்னிறுத்தும் விதமாக அமெரிக்க இறக்குமதி வர்த்தகத்தில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்.

* இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு உருக்கு பொருட்களுக்கு 25 சதவீத வரியும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்ததிலிருந்து இந்தியா - 

* அமெரிக்கா இடையிலான வர்த்தக சிக்கல் உருவானது.
வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுக்கு அளித்து வந்த  ஜி.எஸ்.பி. என்ற சலுகையையும் அமெரிக்கா நீக்கியது.

* அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், அமெரிக்காவில்  உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும், பாதாம் உள்ளிட்ட 28 வகையான பொருட்களுக்கு, இந்தியா கூடுதல் வரி விதித்தது.

* இதை விமர்சனம் செய்த அதிபர் டிரம்ப், இந்தியாவை உலகின் வரிவிதிப்பின் ராஜா என விமர்சனம் செய்ததுடன், இந்த பிரச்சனையை உலக வர்த்தக அமைப்பிடமும் கொண்டு சென்றார்.

* இதற்கிடையே, இந்தியர்களுக்கான எச் 1பி விசா ஒதுக்கீடு அனுமதி உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததுடன்.
இந்தியா தாராள வர்த்தகத்தில் உடன்பட மறுப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

* அமெரிக்காவில் இருந்து சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட பண்ணைப் பொருட்களை தாராளமாக இந்தியா அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா கோரி வருகிறது.

* தவிர, ஹார்லி டேவிட்சன், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இங்கு சந்தைப்படுத்துவதில் தொடரும் சர்ச்சை என வர்த்தக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.  

* தொழில் வர்த்தக நடவடிக்கைககளில் இரு நாடுகளுக்கும் இடையில், இப்படியான போக்குகள் இருந்து வருகின்றன.

* இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணத்துக்கு முன்னதாக, வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை, அமெரிக்கா நீக்கியுள்ளது.

* ஜி 20 நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற்றிருப்பதாலும், உலக வர்த்தகத்தில் அரை சதவீதத்துக்கு மேல் இந்தியா பங்களிப்பு செய்வதாலும், வளரும் நாடாக இந்தியாவை கருத முடியாது என கூறியுள்ளது.

* இதனால், ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

* இதற்கிடையே கடந்த ஆண்டில், அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அங்கு இந்தியர்கள் மத்தியில் அதிபர் டிரம்புடன், நலமா மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

* இதற்கு பின்னணியில், வரவுள்ள அதிபர் தேர்தலில், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஓட்டுகளை கவரலாம் என்ற  நோக்கம் டிரம்புக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

* குறிப்பாக, அமெரிக்க வாழ் இந்தியர்களில் குஜராத் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அரசியல், பொருளாதார செல்வாக்குடனும் இருப்பதால் அவர்களை குறி வைத்ததாக சொல்லப்பட்டது.

* அதேபோல, தற்போது இந்தியாவுக்கு வருவதன் மூலம், குறிப்பாக குஜராத் மாநிலத்துக்கு வருவதன் மூலம், அந்த நோக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.

* தனது இந்திய பயணத்தில், வர்த்தக பேச்சுவார்த்தை இருக்காது என  கூறியிருந்த டிரம்ப், அதன் பின்னர் சிறிய அளவில் அமெரிக்க நலனை முன்னிறுத்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியிருந்தார்.

* அதன்படி, முழுமையான வர்த்தக உடன்பாடுகள் எட்டவில்லை என்றாலும், பகுதி அளவில் நடக்கலாம் என்றும், கோழி இறைச்சி, பண்ணை பொருட்களை அனுமதிக்க ஒப்பந்தம் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

* அப்படி, நடைபெறும் பட்சத்தில், அது இந்திய விவசாய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே பார்க்கப்படுகிறது

* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என மோடி சொல்லி வரும்  நிலையில், அமெரிக்க பண்ணை​ பொருட்களை தாராளமாக அனுமதிப்பது  இந்திய உற்பத்தியாளர்களை பாதிக்கும் என அச்சம் அடைந்துள்ளனர்.

* அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தில், இந்தியாவுக்கு கிடைக்கும் அரசியல்-பொருளாதார பயன் என்ன என்பதில் தெளிவான நிலை எட்டப்படாத நிலையில், வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதிபர் டிரம்ப்க்கு இரட்டை ஆதாயம் கிடைக்கலாம் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்