டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் பேரணி
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், போலீசார் தடியடியால் டெல்லி மற்றும் அலிகார் நகர் போர்க்களமாக காட்சியளித்தன.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது. டெல்லியில் உள்ள ஜமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள், நேற்று பேரணி நடத்தினர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டபடி கைகளில் பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர்.
கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விரட்டிய போலீஸ்
மாணவர்களை தடுத்து நிறுத்த முயன்ற டெல்லி காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர்.
மாணவர்கள் மீது போலீசார் தடியடி
போலீசார் - மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை உருவானது. மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மாணவர்களை காப்பாற்ற மாணவியர் முயற்சி - போலீசாருடன் மல்லுக்கட்டிய மாணவியர்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தாக்கியபோது, அவர்களை காப்பாற்ற போலீசாருடன் மாணவியர் மல்லுக்கட்டினர்.
ஒரு விரல் நீட்டி போலீஸை எச்சரித்த மாணவி
போலீசாரின் தாக்குதலில் இருந்து மாணவர் ஒருவரை காப்பாற்ற மாணவிகள் முயன்றதால் பரபரப்பு நிலவியது. அந்த தருணத்தில் மாணவியரில் ஒருவர் போலீசாரை பார்த்து ஒரு விரல் நீட்டி எச்சரித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது
வாகனங்களுக்கு தீவைப்பு - வன்முறை
மாணவர்கள் போராட்டம், போலீசார் தடியடியை தொடர்ந்து, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. பேருந்துகள் கொளுந்துவிட்டு எரிந்ததால் போர்க்களம் போல காட்சியளித்தது.
அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
இதே போல் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள பல்கலைக் கழக மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்த போலீசார், தடியடி நடத்தினர்.
போலீசாரை கண்டித்து ஜெ.என்.யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறை தலைமையகம் முன்பு திரண்ட மாணவர்களும், மாணவியரும் போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அம்பேத்கர் காந்தி படங்களை ஏந்திபடி முழக்கம்
போலீசாரின் தடுப்புகள் மீது ஏறி நின்ற மாணவர்கள், அம்பேத்கர் மற்றும் காந்தி படங்களுடன் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் மாணவிகளும் ஆக்ரோஷ முழக்கம்
போலீசாரின் செயலை கண்டிக்கும் விதமாக நடந்த இந்த போராட்டத்தில் பெண்களும் ஆக்ரோஷமாக முழக்கங்கள் எழுப்பினர்
போலீசாருக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் சிலர், சமத்துவத்தை எடுத்துரைக்கும் பாடல்களை பாடினர்
மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்து மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
அதேபோல் லக்னோவில் உள்ள உலமா மாணவர்கள் பேரணியாக அணிவகுத்து சென்றனர்
Next Story