மகா ஆட்சி - அதிரடி திருப்பங்கள்..
மகாராஷ்டிராவில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த அரசியல் நாடகங்களுக்கு பிறகு, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பா.ஜ.க -105 தொகுதியிலும்,சிவசேனா - 56 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்வதில் பாஜக - சிவசேனா கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, சிவசேனா தலைமையில் கூட்டணி அமையும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இந்த நிலையில், அந்த கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான அஜித்பவார், ஆளுநரை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
இதை தொடர்ந்து, அஜித் பவார் ஆதரவுடன், 23-ம் தேதி, மகாராஷ்டிரா முதலமைச்சராக பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திரபட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றார். இதை எதிர்த்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு, புதன்கிழமை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
புதிய அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார், ஆகியோர் தங்களது பதவியை செவ்வாய்க்கிழமையன்று ராஜினாமா செய்தனர்.
Next Story