விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை முடித்து கொண்டு, ப. சிதம்பரம், டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு காரில் சென்றார். சிதம்பரம் அவரது வீட்டினுள் சென்றவுடன் காம்பௌண்ட் கதவுகள் மூடப்பட்டு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கபில்சிபல், அபிசேக் சிங்வி உள்ளிட்ட சில காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கார்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன. காம்பௌண்ட் கதவுகள் மூடப்பட்டதால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றனர்.
சிதம்பரம் வீடு முன் குவிந்த காங். தொண்டர்கள்
இதையடுத்து போலீசார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிதம்பரத்தை அழைத்து செல்ல சிபிஐ அதிகாரிகள் வரவழைத்த கார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பினர் . டெல்லி போலீசார், காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தினர்.
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரம்
நீண்ட நேர பரபரப்புக்கு பின், ப. சிதம்பரத்தை காரில் அழைத்துக்கொண்டு, சிபிஐ தலைமை அலுவலகத் திற்கு விரைந்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள், காரை வழி மறித்ததால், மீண்டும் பரபரப்பு நிலவியது. தற்போது சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரத்திடம் அதிகாரிகள், விசாரணையை துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story