குமாரசாமி கடந்த வந்த அரசியல் பாதை...

கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மையை இழந்ததால், குமாரசாமி ஆட்சியை இழந்துள்ளார்.
குமாரசாமி கடந்த வந்த அரசியல் பாதை...
x
மதசார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவரான குமாரசாமி,  முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின், இளைய மகன். கடந்த 2006 ஆம் ஆண்டு, பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்ததை தொடர்ந்து, முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமி 2007 - ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் தேதி வரை பதவியில் நீடித்தார். ஆனால், ஒப்பந்தப்படி, அடுத்த 20 மாதங்கள் பாஜக ஆட்சியமைக்க குமாரசாமி ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் 2009 ஆம் ஆண்டு, மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் குமாரசாமி. இதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு, கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரானார் குமாரசாமி. 2014 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2018 ஆம் ஆண்டு, மீண்டும் கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். 

இதனிடையே, குமாரசாமிக்கு ஆதரவளித்து வந்த 19 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிருப்தியாளர்களை சமரசம் செய்ய குமாரசாமியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 

இதற்கிடையே, பேரவையில் தமக்குள்ள ஆதரவை நிரூபிக்கும் வகையில், நம்பிக்கை தீர்மானத்தை, குமாரசாமி கடந்த 18 ஆம் தேதி கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது கடந்த வியாழன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமை என 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில், குமாரசாமி 99 எம்.எல்.ஏக்களின் ஆதரவை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தார். 425 நாட்கள் மட்டுமே கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி, பதவி வகித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்