" அரசியல் குழப்பம் : பின்னணியில் பா.ஜ.க" - காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 13 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளனர். மேலும் அதன் நகலை ஆளுநரிடம் அளித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக இயக்குவதாக குற்றம்சாட்டினார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனிடையே ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறதா என்று கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியை தக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Next Story