2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் : தங்கம், பெட்ரோல், டீசல் வரி உயர்வு
ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல், டீசல், தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
எல்.இ.டி. விளக்குகள் மூலம் ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று தெரிவித்த அமைச்சர், 2022 ஆம் ஆண்டிற்குள் ஏழை மக்களுக்காக 1 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனக் கூறினார். தங்கம் இறக்குமதிக்கான வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது . இதன் மூலம் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 550 ரூபாய் வரை விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைபோல் பெட்ரோல், டீசலுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலையும் கிட்டத்தட்ட 2 ரூபாய் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படும் .
போக்குவரத்து மற்றும் வர்த்தக துறையில் புதிய அறிவுப்புகள்
ரயில், பேருந்து என, எல்லாவற்றிற்கும் ஒரே பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மின்சார வாகன தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மூன்றுகோடி சில்லறை வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம், சிறு - குறுந் தொழில் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் கடன் வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தமது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். சரக்கு போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்தி, ரயில்வே பாதைகளுடன் இணைக்கும் வகையில் 1 லட்சம் கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற அமைச்சர், நீர்வழிப்பாதைகளை மேம்படுத்தவும் புதிய நீர்வழிப்பாதைகளை ஏற்படுத்தவும் திட்டம் தீட்டியிருப்பதாக தெரிவித்தார்.
Next Story