நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை
x
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் 61 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்தது ஒரு புதிய சாதனை என்றார். சாதி, பேதமற்ற இந்தியாவை உருவாக்குவதே இலக்கு என்றும், கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். வேளாண் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கூறினார். 

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம் மூலம் இதுவரை 19 கோடி பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். வறட்சி பாதித்த பகுதிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த குடியரசுத் தலைவர், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார். ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகளை வழங்க முயற்சி செய்து தருவதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறினார். ஊழலை எந்த வடிவத்திலும் இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 

கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் ராணுவ தளவாட பாதைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அறும் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார். 2022ஆம் ஆண்டில் அனைத்து சாலைகளும் தரம் உயர்த்தப்படும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். அரசின் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் 

இதன் மூலம் தவறான நபர்களின் கைகளுக்கு மானியம் செல்வது தடுக்கப்பட்டுள்ளதோடு, 8 கோடி பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விண்வெளித்துறையில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதாக கூறிய ராம்நாத் கோவிந்த், விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார். சந்திராயன் 2 விண்வெளித்துறையில் இந்தியாவின் புதிய மைல்கல்லாக அமையும் என்றார். கங்கை நதியோடு சேர்த்து நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான ஆறுகளும் சுத்தம் செய்யப்படும் என்றும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாப்பத்தில் அரசு கவனம் கொண்டுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் அவர் கூறினார். வங்கி சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளதாக கூறிய குடியரசுத் தலைவர், 2022ஆம் ஆண்டில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாக தெரிவித்தார்..

நாடாளுமன்றத்தில் குடியரசுத் துணை தலைவர் உரை 

பின்னர் பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்களின் பாதுகாப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்