கூட்டணி கட்சியில் இருந்து அமைச்சர் ஆனவர்கள்... இந்த முறை கூட்டணி கட்சிக்கு இடம் கிடைக்குமா?
கடந்த முறை கூட்டணி கட்சியில் இருந்து மத்திய அமைச்சரவையில் நான்கு பேர் இடம்பெற்ற நிலையில் முழு மெஜாரிட்டியில் உள்ள பாஜக, இந்த முறையும் அதுபோல் வாய்ப்புகளை வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மத்திய அமைச்சரவையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ராம்விலாஸ் பாஸ்வானுக்கு நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் லோக் ஜனசக்தி பீகாரில் 9 இடங்களை பிடித்துள்ளது. இதன் மூலம் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் கடந்த அமைச்சரவையில் சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், உணவு பதப்படுத்தல் துறை அமைச்சராக இருந்தார். இவர், இந்த முறை பஞ்சாப் மாநிலம் பதிண்டா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் பிரோஸ்பூர் தொகுதியில் சுக்பீர் சிங் பாதல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளை கைப்பற்றி உள்ளதால் இந்த கட்சிக்கும் இந்த முறை மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக இருந்தவர் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆனந்த் கீதே. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் இந்த முறை 18 தொகுதிகளை பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிக இடங்களை பிடித்த கட்சிகளின் பட்டியலில் சிவசேனா கட்சியும் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த கட்சிக்கும் இந்த முறை மத்திய அமைச்சரவையில் கணிசமான இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி 16 இடங்களை வென்றுள்ளது. இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அப்னா தளம் 2 இடங்களை பெற்றது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம், நாகாலாந்தில் உள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, ராஜஸ்தானில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி, மேகாலயாவில் உள்ள தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடங்களை பெற்றுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றிய நிலையில் மத்திய அமைச்சரவையில் மேற்கண்ட கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story