கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியா ? - முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் கிடைக்காத சில சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ரமேஸ் ஜார்க்கிஹொளி மற்றும் சுதாகர் ஆகியோர் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் பாஜக தலைவர்களை சந்தித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடமளித்து நிலைமையை சரிசெய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. முன்னதாக பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க எடுக்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது என்றார்.
Next Story