எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிகை விபரங்களை தற்போது காணலாம்..
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி, பா.ஜ.க. 263 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுபோல, காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக தி.மு.க. 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஐஜேகே, மதிமுக, விசிக, கொங்கு மக்கள் கட்சி ஆகியவையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால், அது தி.மு.க. என கருதப்படுகிறது. எனவே, 3வது பெரிய கட்சியாக திமுக மாறும் வாய்ப்பு உள்ளது. இதுபோல, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றியும், 5 இடங்களில் முன்னிலை என 22 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதே போன்று ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றுகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா 18 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. மற்றொரு பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் வென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களை கைப்பற்றுகிறது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 9 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிகாலை 2 மணி நிலவரப்படி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஒரு இடங்களிலும் வெற்றிபெறவில்லை. பஞ்சாபில் மட்டும் 1 இடத்தில் வென்றுள்ளது.
Next Story