அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.?
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஒரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் இழுபறி நீடித்து வந்தது. திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதாக ஸ்டாலின் அறிவித்ததையடுத்து, அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வது உறுதி என கூறப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். மாலை பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி பிரசார கூட்டத்தில் எல்இடி பேனரில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டது.
சென்னை வந்த மத்திய அமைச்சரும் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன் தனியார் ஓட்டலில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தினர். அங்கு நேற்று பிற்பகல் சென்ற தேமுதிக துணை பொது செயலாளர் சுதிஷ் , பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படாததால் பியூஷ் கோயல் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதிஷ் ஒரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறினார்.
இதையடுத்து பிரசார கூட்டத்தில் இடம்பெற்றிருந்த விஜயகாந்த் படம் அகற்றப்பட்டது. இதனிடையே தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர், திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். இதை உறுதி செய்த துரை முருகன் சுதீஷூம் தொலைபேசி மூலம் தம்மிடம் பேசியதாக கூறினார்.
இது குறித்து விளக்கம் அளித்த சுதிஷ், தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்த போது தாம் துரை முருகனுடன் பேசியதாக கூறினார்.
இந்நிலையில் நேற்றிரவு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தேமுதிக துணை பொது செயலாளர் சுதிஷ் மீண்டும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அப்போதும் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story