தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடந்த கால கூட்டணி நிலைப்பாடு பற்றிய தகவல்களை பார்க்கலாம்...
தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு
x
மகாராஷ்டிராவில் செயல்பட்ட தலித் சிறுத்தைகள் என்ற இயக்கத்தின் தமிழக பிரிவின் தலைவர் மலைச்சாமி, 1989ம் ஆண்டு இறந்ததும், அந்த கட்சியின் அமைப்பாளரானார், திருமாவளவன். 1990ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று மதுரையில் அந்த கட்சியின் பெயரை விடுதலை சிறுத்தைகள் என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலங்களில் தேர்தல் அரசியலை புறக்கணித்த இந்த கட்சி, முதன் முதலாக 1999 நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கியது. 

அந்த தேர்தலில், மூப்பனார் தலைமையிலான தமாகா உடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரத்தில் இரண்டே கால் லட்சம் வாக்குகளும், பெரம்பலூரில் 1 லட்சம் வாக்குகளும் கிடைத்தன. 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தமிழகத்தில் 8 தொகுதியிலும் புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போட்டியிட்டது. கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் கூட்டணி என்ற மூன்றாவது அணியை உருவாக்கி, தமிழகத்தில் 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பின்னர், 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை திமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கைகோர்த்தது. 

2006 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக அணியில் தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, மங்களூர் மற்றும் காட்டுமன்னார்குடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்றது. அதன்பிறகு, திமுக அணிக்கு மாறியதோடு 2009 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக, சிதம்பரம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக திருமாவளவன் வெற்றி பெற்றார்.

2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 10 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக அணியில் நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வியை தழுவியது. 

அடுத்த இரண்டே ஆண்டுகளில், திமுக அணியில் இருந்து விலகி, 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தலுக்கு பிறகு மீண்டும் திமுக அணிக்கு திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது வரை அந்த அணியில் நீடித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்