இடைக்கால பட்ஜெட் 2019-2020 - அரசியல் தலைவர்கள் கருத்து
இடைக்கால பட்ஜெட் 2019-2020 - அரசியல் தலைவர்கள் கருத்து
"இடைக்கால பட்ஜெட்டுக்கு முதலமைச்சர் வரவேற்பு"
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மத்திய பட்ஜெட், சிறு விவசாயிகளுக்கு மிகுந்த பலனை கொடுக்கும் என தெரிவித்தார்.
பட்ஜெட் 2019 - மலிவான தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் மக்களை திசை திருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என, திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பட்ஜெட்டில் உள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதியுதவி, ஐந்து லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமானத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்பது உள்ளிட்ட அறிவிப்புகள், மக்களவை தேர்தலில் கரையேறி விட முடியுமா என்ற கனவுலகில் பா.ஜ.க. அரசு பயணிப்பது புரிகிறது என ஸ்டாலின் குறை கூறியுள்ளார். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் வேலை அல்ல - மாநில அரசின் வேலை என கூறி வந்த, மத்திய பாஜக அரசு, தற்போது சலுகைகளை அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தமிழக விவசாயிகள் எதிர்க்கும் "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுப்போம் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில், இடைக்கால பட்ஜெட் மக்களை திசை திருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என, திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
"வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டங்கள் இல்லை" - ராமதாஸ்
இடைக்கால பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரி உச்சவரம்பை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தலை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை, வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட்" - தினகரன்
மத்திய இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநபர் வருமானவரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது, பண மதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு ஆறுதலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த பட்ஜெட்டுகளை போலவே தமிழகத்திற்கு என தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஏமாற்றம் அளிப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்-பேசும்படியாக இல்லை - சரத்குமார்
இடைக்கால நிதியமைச்சரின் இடைக்கால பட்ஜெட் பெரிய அளவில் பேசும்படியாக இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் விவசாயிகள் சந்தித்துவரும் மலையளவு பிரச்சனைகளை அது தீர்க்காது என்று தெரிவித்துள்ளார். வருமானவரி உச்சவரம்பு உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் அது வாக்கு வங்கி அரசியலோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
Next Story