ரஃபேல் விவகாரம் : ராகுல், அருண்ஜேட்லி கடும் விவாதம்
ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , மத்திய அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்று கூறிய ராகுல்காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதுங்குவதாகவும் விமர்சித்தார்.
ரபேல் விவகாரம் குறித்து பேச விடாமல் தடுத்து பாஜக அரசை பாதுகாக்கும் வகையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி குறிப்பிட்டார். எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அரசிடம் கேள்வி கேட்க தமக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கையை 126லிருந்து 36 ஆக குறைத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார். 30ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரபேல் ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஏன் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இதுவரை ஒரு ரபேல் விமானம் கூட இந்தியா வராதது ஏன் என்றும் கேட்டார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு ரபேல் விமானம் 526 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போட்ட நிலையில், பிரான்ஸ் அதிபரை பிரதமர் மோடி சந்தித்த பிறகு ஒரு விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். ரபேல் விவகாரம் தொடர்பான ஆடியோ தம்மிடம் உள்ளதாக ராகுல்காந்தி கூறியதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ராகுல்காந்தி நாள்தோறும் பொய்யை கூறி வருவதாக தெரிவித்தார். ராகுல்காந்தி கூறிய ஆடியோ பொய்யானது என்றும் அது காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்பட்டது என்றும் அருண்ஜெட்லி குற்றம் சாட்டினார்.
Next Story