முத்தலாக் மசோதா : மக்களவையில் காரசார விவாதம்

முத்தலாக் தடை மசோதா, காரசாரமான விவாதத்திற்கு மத்தியில் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
முத்தலாக் மசோதா : மக்களவையில் காரசார விவாதம்
x
ஒரே நேரத்தில் தொடர்ந்து 3 முறை தலாக் சொல்வது தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், முத்தலாக் மசோதா எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும், குறிப்பிட்ட இனத்திற்கு எதிராகவும் உருவாக்கப்படவில்லை என கூறினார். மனிதநேயத்திற்கான இந்த மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார். 

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசினார். முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்தது. இதனால், முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மசோதாவிற்கு ஆதரவாக 245 உறுப்பினர்களும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர். இதனையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் மசோதா, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் முத்தலாக் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்