கஜா நிவாரணம் : "குற்றச்சாட்டு அல்ல கோரிக்கை" - ஸ்டாலின்

புயலால் பாதித்த மக்களை காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பது குற்றச்சாட்டு அல்ல, கண்ணீர் கலந்த வேண்டுகோள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கஜா நிவாரணம் : குற்றச்சாட்டு அல்ல கோரிக்கை - ஸ்டாலின்
x
* ஒரு வார காலம் கடந்த பிறகும், கஜா புயலால் தாக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் இயல்பு நிலை திரும்ப இன்னும் காலம் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். 

* பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய ஆட்சியாளர்களோ, தி.மு.க. மீது பாய்ந்து, திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* பேரிடர் மேலாண்மை என்பது அத்திவாசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உரிய நிவாரணம் வழங்குவதுமாகும். அதனை ஒளிவுமறைவின்றி எடுத்துச் சொல்ல வேண்டியது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கடமை எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

* புயலால் பாதிப்பை பார்வையிட முதலமைச்சர் மேற்கொண்ட பயணத்தை மழையைக் காரணம் காட்டி ரத்து செய்யலாமா என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கேள்வி அல்ல, மக்களின் கேள்வி எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* அவசரக்கோலத்தில் டெல்லி செல்வதில் இருந்த அவசரம், நிவாரணப் பணிகளில் இல்லையே என்ற கேள்வியைத்தான் எதிர்க்கட்சியினர் கேட்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

* நிவாரணப் பணிகளில் இரவு-பகல் பாராமல் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், துப்புரவாளர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரை தாம் பாராட்டத் தவறவில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

* புயலால் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை  என மக்கள் எழுப்பும் அவலக்குரலை அப்படியே எதிரொலிக்க வேண்டியது  எதிர்க்கட்சியின் கடமை எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* புயலின் பாதிப்பில் இருந்து விடுபடாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்படவேண்டும். இது குற்றச்சாட்டு அல்ல. கோரிக்கை, கண்ணீர் கலந்த வேண்டுகோள் எனவும் தி.மு.க. தலைவர் தெரிவித்துள்ளார். 

* மத்திய அரசு, இம்முறையாவது மாற்றாந்தாய்  மனப்பான்மையுடன்  செயல்படாமல், நிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்