கர்நாடகாவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
கர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் காலியாக உள்ள பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்சல்கள் அச்சுறுத்தல் உள்ள ஷிமோகா, உடுப்பி மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷிமோகா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திராவும், ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளராக முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஷிமோகாவில் உள்ள குச்சாரியா கோவிலுக்கு சென்று தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஷிமோகா தொகுதியில் தனது மகன் ராகவேந்திரா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
Next Story