18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை....
18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதையை விளக்குகிறது.
* கடந்தாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை, அவருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாக தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் வழங்கினர்.
* இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு கொறடா சபாநாயகரிடம் புகார் அளித்தார்.
* 4 தினங்களுக்கு பிறகு அதாவது, ஆகஸ்ட் 28ஆம் தேதி 18 எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
* செப்டம்பர் 5ஆம் தேதி வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் அளித்த விளக்கத்தில் திருப்தியில்லை எனக்கூறி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
* செப்டம்பர் 7ஆம் தேதி வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜரான நிலையில், கொறடா தரப்பு ஆஜராகாததால் விசாரணை 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
* அன்றையதினம் அரசு கொறடா அளித்த புகார் மனுவின் நகலை அளிக்க 19 எம்.எல்.ஏ கள் சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
* இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் காலை 11 மணிக்கு உத்தரவிட்டார். அன்றிரவு 8.30 மணிக்கு தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது.
* தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
* மறு உத்தரவு வரும் வரை தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏ தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
* வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, அரசியல் சாசன விவகாரம் என்பதால் இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
* இதனை தொடர்ந்து, அப்போதைய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.
* இறுதி வாதங்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விமலா விசாரிப்பார் என மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவித்தார்.
* இதனிடையே, வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தங்க தமிழ்செல்வன் தவிர 17 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
* கடந்த ஜூன் மாதம் 27ஆம் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணனை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனை தொடர்ந்து, ஜூலை 23ஆம் தேதி முதல் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
* மொத்தம் 12 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று தீர்ப்பளித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவு செல்லும் என தெரிவித்துள்ளார்.
Next Story