"மக்களவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?" -மோடிக்கு காங்கிரஸ் சவால்
மத்திய பா.ஜ.க. அரசின் தோல்வியை மறைக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் என்றும், மக்களவையை கலைத்துவிட்டு, 4 மாநில தேர்தலுடன் தேர்தலை நடத்த தயாரா எனவும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட நான்கு மாநில தேர்தல்களை ஒத்திவைப்பதும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் அதனை இணைத்து நடத்துவதும் தற்போதைய சட்டப்படி சாத்தியமில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. ஆரம்பம் முதலே முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் தோல்விகளை திசைத் திருப்பவே இந்த முழக்கத்தை மக்கள் மத்தியில் அக்கட்சி பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த பிரதமர் முன்வந்ததால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் வெறும் ஏமாற்று வேலை என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே 4 மாநில தேர்தலை மத்திய அரசு தள்ளிப்போட நினைத்தால், நீதிமன்றத்தை அணுகுவோம் என காங்கிரஸ் தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவர் விவேக் தக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story