18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதி முன் விசாரணை
சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு 2-வது நாளாக இன்றும் விசாரணை தொடர உள்ளது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதைதொடர்ந்து, 3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணை மாற்றப்பட்ட நிலையில், நேற்று விசாரணை தொடங்கியது.தகுதி நீக்கப்பட்ட18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு மற்றும் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.அப்போது பி.எஸ். ராமன் தனது வாதத்தின் போது, சபாநாயகரின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது, உள்நோக்கம் கொண்டது என்றார்.சபாநாயகரின் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்று நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் கூறியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.ஜக்கையனுக்கும், 18 எம்எல்ஏக்களுக்கும் வெவ்வேறு அளவுகோலின் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவுடன் சேர்ந்து செயல்பட்டனர் என நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதிமுகவை இரண்டாக உடைத்தது ஓபிஎஸ் அணிதான் எனவும், அரசுக்கு எதிராக வாக்களித்த அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அ.தி.மு.க. என்ற கட்சியே இல்லாத நிலையில் எப்படி கட்சித் தாவலில் ஈடுபட்டனர் எனக் கூறமுடியும் என்றும், 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குற்றம் சாட்டினார். நேற்று வாதம் முடிவடையாததால் இந்த வழக்கில் இன்றும் வாதம் தொடர்கிறது.
Next Story