பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
பாஜக அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களிப்பு
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
* நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
* விவாதம் தொடங்கிய சில மணி நேரங்களில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் விவாதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
* விவாதத்தின் மீது மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். காரசார விவாதம், பிரதமர் மோடியின் பதிலுரையை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
* தீர்மானம் முதலில் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை தொடர்ந்து பொத்தானை அழுத்தி வாக்களிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது.
* வாக்கெடுப்பில் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக 126 உறுப்பினர்களும், ஆதரவாக 325 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
* இதனால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
* மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியான அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
* இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 294 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்கெடுப்பின் போது அதிமுக-வின் 37 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
* இதன்படி அரசுக்கு ஆதரவாக 331 வாக்குகள் பதிவாகி இருந்திருக்கும், ஆனால் 6 வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன. இதனால் பாஜக உறுப்பினர்களில் சிலர் தவறுதலாக மாற்றி வாக்களித்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் வாக்கெடுப்பு என 12 மணி நேரம் இடைவேளை இல்லாமல் மக்களவை நடைபெற்றது.
Next Story