அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி : அதிமுகவுடன் திமுக கைகோர்க்கிறதா?
ஆங்கில வழி கல்வி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அதிமுக அரசிற்கு, திமுக துணைபோவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சட்டப்பேரவையில் சமீபத்தில் நடந்த விவாதத்தின்போது, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து, திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‛ஆங்கில வழி கல்வியை நோக்கியதாக மக்களின் மன நிலை இருக்கிறது என்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் ஆங்கில வழி கல்வி திட்டத்தை அமல்படுத்தும் அதிமுகவின் முயற்சிக்கு, திமுகவும் துணைபோவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆங்கிலவழி கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சர் பேசும்போது, திமுக எப்படி அமைதியாக இருக்கலாம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்வழிக் கல்வியை காப்பாற்ற வேண்டும் எனில், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், தாய்மொழி கல்வியால் தான் முன்னேறியுள்ளன எனவும் தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துகொண்டே வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தமிழ் வழியில் படித்தால் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது என்ற மாயையை சிலர் ஏற்படுத்தி வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலான அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை ஏற்கனவே ஆங்கில வழி கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆரம்ப கல்வியையும் ஆங்கில வழி கல்விக்கு மாற்ற அரசு முயற்சித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் தமிழ்வழி கல்வியின் நிலையை கேள்விக்குறியாக்கிவிடும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story