"என்ன அங்க டீலிங்.. ரகசிய கூட்டா?" - தலைவி சேலையை பிடித்து தரதரவென இழுத்து ரோட்டில் போட்ட பெண்கள்
தெலங்கானா மாநிலம் நாகர்கர்நூலில் உள்ள அச்சம்பேட்டையில் விவசாய விளைபொருள் மார்க்கெட்டிற்கு அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 10 டன் எடையுள்ள நிலக்கடலையை விற்பனைக்காகக் கொண்டு வந்தனர்.. நிலக்கடலையின் அதிகபட்ச விலை 7 ஆயிரத்து 60 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை 4 ஆயிரத்து 816 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்த நிலக்கடலைகளை கையில் கூட எடுத்து பார்க்காமல் வியாபாரிகள் குவின்டால் ஒன்றுக்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து வாங்க முன்வந்துள்ளனர்.. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், அதிகாரிகள் வியாபாரிகளுடன் ரகசிய கூட்டணி அமைத்து செயல்படுவதன் காரணமாகவே வியாபாரிகள் சரியான விலை தராமல் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினர்.. தொடர்ந்து அங்கிருந்த அலுவலகத்தை உடைத்து விவசாய விளைபொருள் மார்க்கெட் கமிட்டி தலைவி அருணாவை சேலையைப் பிடித்து தரதரவென்று வெளியில் இழுத்து வந்த பெண் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நிலக்கடலைகளை அவர் தலைமீது கொட்டி ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.. தொடர்ந்து அருணாவை அங்கிருந்த சாலை சந்திப்பு வரை இழுத்துச் சென்று சாலை நடுவே அமர வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்கெட் கமிட்டி தலைவி அருணாவை விடுவித்து வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.