தமிழகம் கண்ட ஓர் `இரவு பேரழிவு' - உடல்களை தூக்கி கதறிய கலெக்டர் - இன்று வயநாடு...அன்று குன்னூர்
தமிழகம் கண்ட ஓர் இரவு பேரழிவு
உடல்களை தூக்கி கதறிய கலெக்டர்
தூக்கத்திலேயே துடித்து மடிந்த உயிர்கள்
அந்த துயரத்தின் பிரத்தியேக காட்சி
இன்று வயநாடு...அன்று குன்னூர்
கேரள மாநிலம் வயநாட்டைப் போலவே, 1991ஆம் ஆண்டில், தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் கோர நினைவுகளை, பிரத்யேக காட்சிகளுடன் விவரிக்கிறது, இந்தத் தொகுப்பு...
கடும் நிலச்சரிவால் உருக்குலைந்து கிடக்கிறது, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதி. நூற்றுக்கும் மேற்பட்டோர் உறக்கத்திலேயே உயிரிழந்த துயரம், ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கி எடுக்கிறது.
இதே போன்றதொரு துயர சம்பவம், 1990களில், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டம் குன்னூரை நிலைகுலையச் செய்திருக்கிறது..... 1991ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி... வட கிழக்கு பருவமழை வெளுத்துக் கொண்டிருந்த நள்ளிரவு சமயம்...
மஞ்சூர் கெத்தை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, கெத்தை மின் முகாமில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் பிரமாண்ட பாறைகள் மற்றும் மண்ணுக்கு அடியில் மூழ்கி மறைந்தன. சாலைகளும் துண்டிக்கப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்தனர்... பலர் உடைமைகளை இழந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். தற்போது போன்று தொலைத் தொடர்பு உள்ளிட்ட நவீன வசதிகள் எதுவும் அந்த கால கட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்புப் பணி நடந்திருக்கிறது. கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு, பாறைகளை அகற்றி மண்ணுக்கடியில் கிடந்த நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டன.
அன்றைய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்பேத்கர் ராஜ்குமார் மேற்பார்வையில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மீட்புப்பணி குறித்த செய்தியாளர் சந்திப்பில், ஆட்சியர் அம்பேத்கர் ராஜ்குமார் கண்கலங்கியதை இன்றும் அங்குள்ள மக்கள் நினைவு கூருகின்றனர்.
தொலைத்தொடர்பு, நவீன இயந்திரங்கள் என எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத 1991ஆம் ஆண்டு நடந்தேறிய இந்த துயரத்தில் இருந்து குன்னூர் மக்கள் மீண்டு வந்திருக்கிறார்கள்.
இவர்களைப் போலவே, தற்போது, நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் வயநாடு மக்களும் மீண்டு வருவார்கள்...