பாஜக பபிதா குமாரிக்கு எதிராக வினேஷ் போகத் களம்...?

x

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டி வரையில் சென்று... 100 கிராம் எடை அதிகமானதால் பதக்க வாய்ப்பை நழுவ விட்டவர் வினேஷ் போகத்...

முன்னாள் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு எதிராக பாலியல் புகார் கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராடியவர் வினேஷ் போகத்....

வினேஷ் போகத் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது, பாஜகவின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது தேசிய அரசியலையே உலுக்கியது.

அதிகாரத்திற்கு எதிராக போராடியவர், பாரீஸ் ஒலிம்பிக் அரசியல் பேச்சுக்களுக்கு எந்த இடமும் கொடுக்கவில்லை... பதக்கம் இல்லாமல் இந்தியா திரும்பியவரை ஒட்டுமொத்த தேசமும் பாசம் காட்டி வரவேற்றது...

இப்போது அவர் மீதான அனுதாப அலையை அரசியலில் பயன்படுத்த கட்சிகள் நோட்டம் போடுவதாக அரியானாவிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

அவரது சொந்த மாநிலமான அரியானாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அரியானாவில் பாஜக வசம் இருக்கும் ஆட்சியை பறிக்க காங்கிரஸ் குஸ்தி போடுகிறது. ஆம் ஆத்மியும்... ஜன்நாயக் ஜனதா கட்சியும் ரேசில் இருக்க 4 முனைப் போட்டி களை கட்டியுள்ளது. இந்த கட்சிகள் வினேஷ் போகத்தை அணுகுவதாகவும் பேச்சு அடிபட தொடங்கியிருக்கிறது.

வினேஷ் போகத் அரசியலுக்கு வரலாம் என அவரது உறவினரே பற்ற வைத்திருக்கிறார். ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்... தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத்தும், யோகேஸ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியாவும் களமிறக்க வாய்ப்பிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதாகவும கூறியிருக்கிறார்.

இவர் தெரிவித்துள்ள பபிதா குமாரியும் மல்யுத்த வீராங்கனைதான்.. 2019 ஆம் ஆண்டே பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்ட பபிதா குமாரி இம்முறை தேர்தலில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.. அவருக்கு எதிராகதான் வினேஷ் போகத் களம் இறக்கப்படுவார் என்ற பேச்சு அரசியலை பற்றியிருக்கிறது.

இதற்கிடையே காங்கிரஸ் அவரை நெருங்குவதாகவும் கூறப்படுகிறது. ஆனால்... ஏற்கனவே அரசியலா.. நோ வே என வினேஷ் போகத் கூறி விட்டார். அவரை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்து விட வேண்டும் என மல்லுகட்டுவோருக்கு பயன் கிட்டுமா...? என்பதை பொறுத்திருந்து காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்