20 ஆண்டுக்கு பின் மீண்டும் மனித வேட்டை... ஊருக்குள் புகுந்த கொடூர அரக்க கூட்டம் - நடுங்கும் மக்கள்

x

20 ஆண்டுக்கு பின் மீண்டும் மனித வேட்டை

ஊருக்குள் புகுந்த கொடூர அரக்க கூட்டம்

ரத்த வெள்ளத்தில் மிதந்த 8 பிள்ளைகள்

உத்தரப்பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நுழைந்துள்ள ஓநாய் கூட்டம், 9 பேரை வேட்டையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் சில நாட்களாக ஓநாய்கள் கூட்டம் படையெடுத்து வருவது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 45 நாட்களில் 8 சிறார்கள் மற்றும் ஒரு பெண் என 9 பேரை ஓநாய்கள் கொடூரமாக கொன்றுள்ளன. சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், ஓநாய்களை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

இதற்காக ஆப்ரேஷன் பேடியா என்ற திட்டத்தை தொடங்கிய வனத்துறை, ட்ரோன் கேமராக்கள் மற்றும் தெர்மல் ட்ரோன் மேப்பிங் மூலம் ஓநாய்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அதன் பாதையை கணித்து வைக்கப்பட்ட கூண்டுகளில் இதுவரை 4 ஓநாய்கள் சிக்கியுள்ளன..

4 ஓநாய்களை பிடித்தும் மக்கள் நிம்மதி அடைய முடியவில்லை.. இதுதவிர மேலும் 2 ஓநாய்கள் சுற்றி வருவதாகவும், அதை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், வனத்துறை தெரிவித்ததே அதற்கு காரணம்.. பிடிபட்ட ஓநாய்களை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், உள்ளூர் எம்.எல்.ஏ.வான சுரேஷ்வர் சிங், எல்லா ஓநாய்களும் பிடிபடும் வரை மக்களுக்கு பாதுகாப்பளிக்கப்படும் என உறுதியளித்தார்.


பஹ்ரைச் பகுதியில் ஓநாய்கள் தாக்குதல் என்பது புதிய சம்பவம் அல்ல... கடந்த 2004-ஆம் ஆண்டு இதே பகுதியில் இதேபோல ஓநாய் கூட்டம் வேட்டையாடியதில் 32 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு தாக்குதல் ஏதும் இல்லாத நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் ஓநாய் கூட்டம் மீண்டும் படையெடுத்துள்ளது.


இந்நிலையில் இரவு நேரங்களில் மக்கள் யாரும் திறந்த வெளியில் உறங்க வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் தங்கள் ஊருக்கு தாங்களே பாதுகாப்பு என்ற பாணியில் ஊர் மக்கள் சிலர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பீதியில் தூக்கத்தை தொலைத்துள்ள பஹ்ரைச் பகுதி மக்கள், மீதமுள்ள ஓநாய்கள் பிடிபட்டபின் மீண்டும் நிம்மதியாக உறங்கும் இரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்