திருப்பதிக்கு 10 லட்சத்து 116 முறை கோவிந்தா நாமம் எழுதி எடுத்து வந்த மாணவி
ஒரு கோடியே ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி எடுத்து வரும் மாணவ, மாணவிகளுக்கு வெகுமதியாக குடும்பத்துடன் ஏழுமலையானை விஐபி பிரேக் தரிசனத்தில் வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதேபோல், பத்து லட்சத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி எடுத்து வரும் மாணவ, மாணவிகளுக்கு வெகுமதியாக அவர்கள் மட்டும் விஐபி பிரேக் தரிசனத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, பெங்களூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கீர்த்தனா, 10 லட்சத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி திருமலைக்கு எடுத்து வந்தார். அதனை பரிசீலித்த தேவஸ்தான அதிகாரிகள் அந்த மாணவிக்கு வெகுமதியாக விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வாய்ப்பளித்தனர். திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பை ஏற்று, முதல் முறையாக கோவிந்த நாமம் எழுதி வந்த மாணவி கீர்த்தனாவை தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டினர்.