சந்திரயானுக்கு உயிர்நாடியே "தமிழக மண்" தான்.. 50 டன் எடுத்துசென்ற இஸ்ரோ..

x

இந்தியாவின் நிலவு பயணத்திற்கு உதவிய தமிழகத்தைச் சேர்ந்த இரு கிராமங்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்குவது எத்தகைய சவாலான பணி என்பதை சந்திரயான் -2 திட்டத்தின் போதே நாம் அறிந்திருந்தோம்.

தற்போது நிலவை தொடும் தூரத்தில் பயணித்து வரும் சந்திரயான் -3ல் இருந்து லேண்டரையும் ரோவரையும் வெற்றிகரமாக தரையிறக்குவதிலேயே இந்த திட்டத்தின் மொத்த வெற்றியும் அடங்கியிருக்கிறது.

இங்குதான் நிலவில் உள்ள மணலுக்கும்.. பூமியில் உள்ள மணலுக்கும்.. என்ன வித்தியாசம் ? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

அமெரிக்காவின் அப்போலோ திட்டத்திற்கு பிறகே நிலவில் அனார்தசைட் மற்றும் பேசால்ட் மண் வகை பாறைகள் இருப்பதை உலகறிந்தது.

நிலவில் குறிப்பாக தென் துருவப் பகுதியில் காணப்படும் அனார்தசைட் மண் வகைகள்... பூமியிலும் வெகு சில பகுதிகளில் மட்டுமே இருப்பது பின்னர் தெரிய வந்தது.

அதன்படி, அமெரிக்காவின் Adirondack மலைப்பகுதியிலும்... கனடாவின் Grenville மற்றும் Labrador மாகாணங்களிலும்... நார்வேயின் Fen Complex என்ற இடத்திலும் நிலவில் காணப்படும் அனார்தசைட் மண் காணப்படுகிறது.

இந்த மண் இந்தியாவில் தமிழகத்தில் அதுவும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை ஆகிய இரு கிராமங்களில் மட்டுமே காணப்படுவது தான் ஆச்சரியம்.

கடந்த 1950 ஆண்டுவாக்கிலேயே நாமக்கல் மாவட்டத்தில் அனார்தசைட் வகை பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 திட்டத்தின் சோதனைக்காக அமெரிக்காவிடம் இருந்து காசு கொடுத்து

10 கிலோ அனார்தசைட் மண்ணை வாங்கியது..ஒரு கிலோ 150 டாலர் கொடுத்து அதாவது இந்திய மதிப்பில் 12500 ரூபாய் கொடுத்து வாங்கியது இஸ்ரோ...

ஆனால் சந்திரயான் -2 திட்டத்தின் போது... நிலவில் காணப்படும் அனார்தசைட் மணலில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கி சோதனை செய்து பார்க்க விரும்பிய இஸ்ரோவுக்கு... இம்முறை சுமார் 60 முதல் 70 கிலோ அனார்தசைட் மணல் தேவைப்பட்டது.

அப்போது சந்திரயான் -2வின் திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை மேற்கொண்ட முயற்சியால்

நாமக்கல்லில் உள்ள அனார்தசைட் மணல் நிலவின் மணலுடன் 90 சதவீதத்திற்கும் மேல் ஒத்துப்போனது தெரிய வந்தது.

அதன் பின்னர் கடந்த 2012 - 13 ஆம் ஆண்டில் சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகளை சேலத்தில் உள்ள ஒரு குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அளவிற்கு இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் - 2வின் லேண்டரையும்.... தற்போது சந்திரயான் -3யின் லேண்டரையும் பல முறை தரையிறக்கி சோதனை பார்த்து , பிறகு நிலவை நோக்கி அனுப்பியிருக்கிறார்கள்,

இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவில் சந்திரயான் -3 தரையிறங்கி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்க உள்ள அந்த பொன்னான தருணத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடனும் பிரார்த்தனையுடனும் இன்று ஒட்டு மொத்த தேசமும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்